பண்டைய கால மக்கள் பயன்படுத்திய முறைமைகள் மூலம் இலங்கையின் தற்போதைய சனத்தொகைக்கு உணவளிக்க முடியுமா? நாம் விவசாயத்தில் தன்னிறைவு அடைந்துள்ளோமா? ஒரு அரிசி மணி என்பது அற்புதமானதொரு விடயம், எனினும் எம்மிடம் கூறப்படும் இந்த புராணக் கதைகளின் உண்மையான பெறுமதிகளை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

March 24, 2022

Image: Claudius Ptolemy’s map of ancient Taprobane. Credit: archeology.lk

Image: Claudius Ptolemy’s map of ancient Taprobane. Credit: archeology.lk

கதை & ஆய்வு : யுதஞ்சய விஜேரத்ன செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம்
மொழிபெயர்ப்பு : மொகமட் பைரூஸ்

நினைவு என்பது ஒரு மாயையான விடயம்

எமது கதை பின்வருமாறு நகருகின்றது: முன்னொரு காலத்தில் இலங்கை விவசாயத்தில் தன்னிறைவு அடைந்த நாடாகக் காணப்பட்டது. எமக்குத் தேவையான அரிசியை நாமே உற்பத்தி செய்தோம், மில்லியன் கணக்கானவர்களுக்கு எம்மால் உணவு வழங்க முடிந்தது. எமக்கு திறந்த பொருளாதாரம் தேவைப்படவில்லை. மேலும் எமக்கு நிச்சயமாக இந்த புதிய தொழில்நுட்பங்களோ அல்லது விலை கூடிய இறக்குமதிகளோ அவசியப்படவில்லை.

நீங்கள் ஒரு இலங்கையனாக இருந்தால், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கதை உங்களுக்கு கூறப்பட்டிருக்கும்.

அரசியல்வாதி ஒருவர் கதைக்கும் விடயங்களில் ஒன்றாக, ஊடகவியலாளர்கள் கூறும் ஒரு விடயமாக, தந்தை வழக்கமாக தேனீர் அருந்தச் செல்லும் கடையில் பேசப்படும் விடயமாக அல்லது சில கோப்பைகள் மதுபானம் மற்றும் அதனுடன் இணைந்த சிற்றுண்டிகளின் பின்னர், இக்கதை எழுவது வாடிக்கையாக அமைந்திருக்கும்.

இங்குள்ள பிரச்சினை என்னவெனில் நாம் எமக்கு கூறும் இக்கதை அதனுடன் இணைந்த தரவுகளுடன் சரியாகப் பொருந்தாதிருப்பதாகும்.

முதலாவதாக, நெல் எமது பிரதான பயிர்ச்செய்கையாக அமைகின்றது, விவசாயத் தொழிலாளர் படையின் பெரும்பான்மையினர் இப்பயிர்ச்செய்கையிலேயே ஈடுபடுகின்றனர். எவ்வாறாயினும், நாம் குறைந்தது 1960 ஆம் ஆண்டில் இருந்து ஆலையில் பதனிடப்பட்ட அரிசியை இறக்குமதி செய்து வருகின்றோம் [1].

1960 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதனிடப்பட்ட அரிசி இறக்குமதியைக் காட்டும் விளக்கப்படம். 2000 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மெட்ரிக் தொன் இறக்குமதிகள் அதிகமாக இருந்தன.

1960 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதனிடப்பட்ட அரிசி இறக்குமதியைக் காட்டும் விளக்கப்படம். 2000 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மெட்ரிக் தொன் இறக்குமதிகள் அதிகமாக இருந்தன.

கோதுமையை நோக்கும் போது: இலங்கையில் கோதுமை உற்பத்தி செய்யப்படுவதில்லை அத்துடன் எமது உள்ளூர் கோதுமை மாவு ஆலைகளுக்காக நாம் கோதுமையினை இறக்குமதி செய்து வருகின்றோம். அண்மைக் காலமாக, நாம் கோதுமை மாவை நேரடியாகவும் இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளோம்.

https://notioncharts.io/embed/charts/f8f89e55-2dba-4feb-b508-685eb64d01cd

பருப்பு, சீனி, பால் மற்றும் பாலுற்பத்தி பொருட்கள்: இவற்றில் சிறிய அளவுகள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட போதும், இந்த அனைத்து பொருட்களுக்கும் நாம் இறக்குமதியிலேயே தங்கியுள்ளோம். கடந்த 60 வருடங்களில், நாம் தன்னிறைவை எட்டிப் பிடித்த தருணமொன்றாக 2006 அமைகின்றது, அத்தன்னிறைவு அரிசியில் மாத்திரமே எட்டப்பட்டது.

இது எதனை குறித்துக் காட்டுகின்றது என சிந்தியுங்கள்: தற்பொழுது உயிருடன் உள்ள ஒவ்வொருவரும் (வாழ்ந்த ஒவ்வொருவரும்) நாம் மூடிய பொருளாதாரத்தை கொண்டிருந்த போதும் (1977 இற்கு முன்னர்) அல்லது திறந்த தாராளவாத பொருளாதாரத்தை கொண்டிருந்த போதும் (1977 இற்கு பின்னர்) இறக்குமதி செய்யப்பட்ட உணவை உட்கொண்டுள்ளோம். நாம் ஒரு போதும் விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தவர்களாக இருக்கவில்லை. அவ்வாறான ஒரு காலப்பகுதி எமது அண்மைய நினைவில் காணப்படவில்லை.

புராதன வரலாறு என்ன சொல்கின்றது?

இலங்கை பல நூற்றாண்டுகளாக விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து வாணிபத்தில் ஈடுபட்டு வந்தது. நாம் அறிந்தது இவ்வளவுதான்: ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் ஆசியா என்பவற்றின் கடல்வழிப் பாதையில் ஒரு மையமாக இலங்கை காணப்பட்டது.

‘கிழக்கின் தானியக் களஞ்சியம்’ என அறியப்பட்ட இலங்கையில் அரிசி மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஏனைய விவசாயப் பொருட்கள் உள்ளூர் மக்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்பட்டதோடு ஏனைய நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் இலங்கை விவசாயிகள் விலங்குகளின் எச்சங்கள் மற்றும் அறுவடையின் பின் எஞ்சிய தாவரப் பகுதிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தல், சுழற்சி முறைப் பயிர்ச்செய்கை, மாற்றுப் பயிர்ச்செய்கை முறை மற்றும் பயிர்ச்செய்கை பல்வகைமையாக்கம் போன்ற உத்திகளை பயன்படுத்தியதாக நம்பப்படுகின்றது.