டொலர்கள் மற்றும் கடன் ; இன்று நாம் அதிகம் புலம்புவது இவற்றைப் பற்றித்தான். இலங்கை ஏன் கடன் பெற வேண்டும்? எப்போது, எவ்வளவு கடன்பட்டிருக்கிறது? இந்தக் கடன்களை எதற்காகப் பயன்படுத்தியிருக்கிறோம்? நமது பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மேலுள்ள கேள்விகளுக்கான பதில்களை இங்கு ஆராய்கிறோம்.

March 4, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

debt.png

ஆய்வு : உமேஷ் மொரமுதலி காட்சிப்படுத்தல்கள் : யுதஞ்சய விஜேரத்ன செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : மொஹமட் பைரூஸ் & நாதிம் மஜீத்

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் முதன்முறையாக தனது வெளிநாட்டு கடன் மீளச் செலுத்தும் கடப்பாடுகளில் இருந்து தவறும் நிலை உருவாகியுள்ளது. சில சர்வதேச ஊடகங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் என்பன எதிர்வரும் மாதங்களில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில் இருந்து தவறும் என சுட்டிக்காட்டியுள்ளன.

இதனை நோக்கும்போது எமக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன: இலங்கைக்கு எவ்வளவு கடன் உள்ளது? யாரிடம் இருந்து இக்கடன்கள் பெறப்பட்டுள்ளன? எம்மால் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு நாம் ஏன் மற்றும் எவ்வாறு இக்கடன்களை பெற்றுக்கொண்டோம்? இந்த கேள்விகளுக்கு விடை காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

முதலாவதாக, ஏன் இலங்கை இவ்வளவு அதிக கடன்களை பெற்றுக்கொண்டது?

இதனை எளிமையாகக் கூறுவதாயின்: இலங்கை அரசாங்கங்களால் போதிய வருமானத்தை பெற முடியாமல் போனதே பிரதான காரணமாகும்.

அரசாங்கங்களின் வருமானங்கள் அவற்றின் செலவினங்களை ஈடு செய்ய போதாது என்கின்ற நிலையை அடையும்போது அவை கடன்களைப் பெறுகின்றன. தேசிய பாதுகாப்பினை வழங்குதல், சட்டம் ஒழுங்கை பேணுதல், உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களை அமுல்படுத்துதல் என்பன அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளாக அமைகின்றன. இலங்கையின் அரசாங்கமும் இதற்கு விதி விலக்கானது அல்ல.

ஆசிரியர்கள், வைத்தியர்கள், பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் போன்ற அரச துறை பணியாட்களின் சம்பளங்களை வழங்குதல், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசன முறைமைகள், அத்துடன் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்குவதும் அரச செலவினங்களின் பகுதியாக அமைகின்றது. இந்த செலவினங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக பணத்தைத் திரட்ட வேண்டிய தேவையுள்ளது. வரிகளே அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமாக அமைகின்றன. பொருட்கள், சேவைகள், தனி நபர்கள் மற்றும் கம்பனிகள் மீது அரசாங்கத்தினால் வரிகள் விதிக்கப்படுகின்றன. எனினும் அரசாங்கம் வரிகள் மூலம் போதிய வருமானத்தை திரட்ட முடியாமல் போகும் நிலையால் ஏற்படும் இடைவெளியை நீக்குவதற்கு அவை கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

அரசாங்கம் கடன்களைப் பெறும் வேளை அது உள்ளூர் மூலங்களிடம் இருந்தோ அல்லது வெளிநாட்டு மூலங்களில் இருந்தோ கடன்களைப் பெற்றுக்கொள்கின்றது. உள்நாட்டுக் கடன் பெறுகைகள் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளை வழங்குவதன் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முறிகள் மற்றும் உண்டியல்கள் அரசாங்கத்தின் பிணை பொறுப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்தக் கட்டுரையில் நாம் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மூலங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் கடன்களைப் பற்றியே நோக்கவுள்ளோம்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பற்றிய ஒரு மீட்டல்

கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களின் பெரும் பகுதிக்கான நிதியிடல்கள் வெளிநாட்டுக் கடன்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 70 களின் பிந்திய பகுதி மற்றும் 80 களில் இலங்கை அரசாங்கம் மகாவெலி அபிவிருத்தி திட்டம் போன்ற பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வந்தது. இத்திட்டங்களுக்கான நிதியிடல்கள் ஏனைய நாடுகள் மற்றும் உலக வங்கி போன்ற பல்தேசிய நிறுவனங்கள் வழங்கிய கடன் வசதிகளின் மூலமே மேற்கொள்ளப்பட்டன.

பல தசாப்தங்களாக இலங்கை தனது அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்ற சலுகைமிக்க வெளிநாட்டுக் கடன்களிலேயே அதிகம் தங்கியுள்ள நாடாக இருந்து வருகின்றது. சில பொருளியல் நிபுணர்கள் இலங்கையை கொடை வழங்குவோரின் அன்புக்குரிய நாடு என அடையாளம் காணும் அளவுக்கு இந்த தங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.

Sri_Lankan_National_debt_as_a_%of_GDP(1951-2020)__Domestic_Foreign_Total_chartbuilder.png

கடன் வாங்குவதில் அதிகம் தங்கியிருந்தமையினால் 1977 ஆம் ஆண்டு பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் கடன்கள் துரிதமாக அதிகரித்தன. இலங்கை அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நுகர்வுக்காக தொடர்ச்சியாக கடன்களைப் பெற்றுக்கொண்டிருந்தமையால் 1980 களில் இலங்கையின் கடனின் அளவு வானளாவ உயர்ந்திருந்தது. 1989 இல் இலங்கையின் கடன்கள் (இதில் உள்ளூர்க்கடன்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்குகின்றன) நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் அளவுடன் ஒப்பிடும் வேளை அதன் 109% ஆகக் காணப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தியின் உச்ச சதவீதமான 62% என்ற அளவீட்டையும் 1989 ஆம் ஆண்டு இலங்கை பதிவு செய்தது.

மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டுக் கடன் உச்ச அளவீடுகளை அடைந்த போதும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் அக்கால நெருக்கடி நிலையினை சமாளித்தது. அந்நேரத்தில் இலங்கை பெற்றிருந்த பெரும்பாலான கடன்கள் சலுகை அடிப்படையில் அமைந்திருந்ததே நிலைமையை சமாளிக்க முடிந்தமைக்கான பிரதான காரணமாகும். இந்த சலுகைக் கடன்கள் குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான கூடிய கால அவகாசம் என்பவற்றைக் கொண்டனவாக அமைந்திருந்தன. இந்தக் காலப்பகுதிகள் 20 தொடக்கம் 40 வருடங்கள் என்ற வேறுபட்ட அளவுகளில் அமைந்திருந்தன. எனவே ஒவ்வொரு வருடமும் அதியுயர் வெளிநாட்டுக் கடன் தவணைப் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டிய தேவை காணப்படவில்லை.

எனினும், இலங்கை 1997 ஆம் ஆண்டு [நடுத்தர வருமானம் பெறும் நாடு](https://www.worldbank.org/en/country/srilanka/overview#:~:text=Sri Lanka is a lower,%2C inclusive%2C and resilient country.) என்ற நிலைக்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் நிலைமைகள் மாற்றமடைய ஆரம்பித்தன. இவ்வாறான தரமுயர்த்தலைத் தொடர்ந்து பல்தரப்பு அபிவிருத்தி முகவர் அமைப்புகள் இலங்கைக்கான சலுகைக் கடன்களை குறைக்க ஆரம்பித்தன. நாம் தலா மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் நடுத்தர வருமானம் பெறும் நாடு என தரமுயர்த்தப்பட்ட (நபர் ஒருவரின் சராசரி வருட வருமானம்) அதே வேளை எமக்கு பல பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அதிகமான உட்கட்டமைப்பு தேவைகளும் காணப்பட்டன. மேலும், வரவு செலவுத் திட்டத்தில் பாரிய துண்டு விழும் தொகைகள் காணப்பட்ட நிலையில் சொந்தமாக உட்கட்டமைப்பில் முதலீடு செய்யும் திறன் இலங்கையிடம் இருக்கவில்லை.

எனவே, இலங்கை இந்நிலையை சமாளிக்க என்ன செய்தது? நாம் மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தோம். சர்வதேச முதலீட்டுச் சந்தைகள் எம் முன் காணப்பட்ட ஒரு சாத்தியமான தெரிவாக அமைந்திருந்தது, மேலும், ஏற்றுமதி - இறக்குமதி வங்கிகள் (EXIM Banks), பிரதானமாக சீனாவின் EXIM வங்கியில் தங்கிருப்பது இன்னொரு தெரிவாக காணப்பட்டது. இவற்றிடம் பெறும் கடன்கள் வர்த்தக ரீதியான கடன்கள் என்பதால் கடனுக்கான செலவு மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. இது கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையின் கடன் இயக்கவியலில் முழுமையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியது. 2020 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியை அடைந்த போது இலங்கையின் மொத்தக் கடன்களில் 51% சலுகைகளற்ற வர்த்தகக் கடன்களாகவே அமைந்திருந்தது.