நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம், முக்கியமான ஐந்து விவசாய மாவட்டங்களுக்கு பயணம் செய்து (எரிபொருட் பற்றாக்குறை தீவிரமடைய முன்) அங்குள்ள விவசாயிகளிடம் உரையாடியிருந்தோம். நீண்ட காலமாக கவனிப்புக்குட்படாது நாடு முழுவதும் பரந்து கிடக்கும் கதைகள் இவை.

பொலநறுவைக்கும் மெதிரிகிரியவுக்கும் இடைப்பட்ட நீண்ட வீதிகளில் நெல் காயவிடப்பட்டிருக்கிறது. இந்த பிரதேசங்களில் அறுவடையின் அளவு பாதியாக குறைவடைந்திருக்கிறது.

பொலநறுவைக்கும் மெதிரிகிரியவுக்கும் இடைப்பட்ட நீண்ட வீதிகளில் நெல் காயவிடப்பட்டிருக்கிறது. இந்த பிரதேசங்களில் அறுவடையின் அளவு பாதியாக குறைவடைந்திருக்கிறது.

பயணம்

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமுல்படுத்திய திடீர் இரசாயன உரத்தடையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளின் கதைகளை கேட்க 2022 ஏப்ரல் மாதம் Watchdog குழுவினர் இலங்கை முழுவதும் பயணம் செய்து ஐந்து இடங்களிற்கு சென்றிருந்தோம்.

இவ்விவசாயிகளின் அனுபவங்கள், இக்கொள்கை முடிவு எவ்வளவு குறுகிய பார்வை கொண்டது என்பதையும் அதன் தாக்கத்தின் கனதியையும் உங்களிற்கு புரியவைக்கும். ஓர் ஆண்டு கழிந்த பின் கொள்கை முடிவை திரும்பப் பெற்றதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட இழப்புகளை என்றைக்குமே ஈடு செய்யமுடியாது. இவற்றுக்கு எல்லாம் மேலாக, அவர்களுக்கு வழங்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீடும் இன்றுவரை வழங்கப்படவில்லை.

விவசாயிகளுடன் நாங்கள் உரையாடுவதற்கு எல்லா வகையிலும் ஏற்பாடுகள் செய்து உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள், மிக முக்கியமாக தங்களது பொன்னான நேரத்தையும் நுண்ணறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து இந்தத்தொடர் உருவாகக் காரணமாயிருந்த விவசாயிகளிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.


நாம் எங்கு சென்றோம்?

ராஜபக்சக்களின் கோட்டையான அம்பாந்தோட்டை விவசாயிகளின் நிலையை எமது தொடரின் முதல் பகுதியில் பகிர்ந்திருந்தோம். நாடு முழுவதுமுள்ள ஐந்து முக்கிய விவசாய இடங்களை நோக்கிய எமது பயணத்தின் ஆரம்பப்புள்ளி அதுதான். வாருங்கள் எமது வழித்தடத்தை மீண்டும் ஒருமுறை மீட்டிப்பார்த்துக் கொள்வோம்.

சம்மாந்துறை: கிழக்கின் நெற்களஞ்சியத்தில் இப்போதுதான் அறுவடை முடிவடைந்துள்ளது. அம்பாறைக்கும் சிறுநகர் ஒன்றுக்கும் இடைப்பட்ட A31 வீதி நெடுகிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அறுவடை செய்யப்பட்ட வெற்று நெல்வயல்களே தென்படுகின்றன. நாட்டின் முதலாவது நீர்ப்பாசனத் திட்டம் ஆகிய கல்லோயாவின் துணை நதிகள் வயல்களுக்கு நீர் பாய்ச்ச வீதியை குறுக்கறுத்து பாயவேண்டும், ஆனால் அவையோ காய்ந்து கிடக்கின்றன. அதற்கான காரணத்தை பிறகு பார்ப்போம். இரு போகங்களுக்கு இடையில் வெற்று வயல்களில் எஞ்சி கிடப்பதை உண்ண யானைகள் அங்கு உலாவரும். இந்தப் பெருவீதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களும் உழவு இயந்திரங்களும் செல்லும் ஒரு மண்பாதையில் நீண்ட தூரம் பயணித்து, பிரதேச செயலாளருடனான கூட்டத்துக்காக விவசாயிகள் மதிய உணவு சமைத்துக் கொண்டிருக்கும் பட்டம்பிட்டி அணைக்கட்டை சென்றடைந்தோம்.

வலப்பன: ஊரடங்கு அப்போதுதான் தொடங்கியிருந்தது. நாங்கள் தென்னஹென்வல வயல்களை நோக்கி ஹரகம வீதியில் செங்குத்தாக ஏறிநடக்கத் தொடங்கினோம். உயரத்தில் மலைகள் சூழ நெல்லும் சிறு பாத்திகளில் மரக்கறிகளும் விளைந்து காணப்படுகின்றன. இந்த வயல்கள் மலைகளின் சரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு இயந்திரங்களை கொண்டு வரமுடியாது. நெல் விதைப்பும் அறுவடையும் பாரம்பரிய முறைப்படி கைகளாலேயே செய்யப்படுகின்றன. இப்பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களாக வெப்பம் அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிப்பது, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இங்கும் காலெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதை நமக்கு உணர்த்துகிறது.

பொலநறுவை: வடமத்திய மாகாணத்தின் நிலப்பரப்பு நெல்வயல்களும், மரக்கறித்தோட்டங்களும் மற்றும் அறுவடையைத் தொடர்ந்து நடாத்த உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களும் நிறைந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மெதிரிகிரிய மற்றும் ஹிங்குராங்கொட வீதிகளில் காயவிடப்பட்டுக் கிடக்க பல தசாப்தங்களாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களது ஞாபகங்களை இரை மீட்டுகின்றனர். மகாவலி நீர்ப்பாசனத்தின் வாய்க்கால்களால் வளமூட்டப்படும் இப்பிரதேசம், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் உரத்தடைக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்ட மூலந்தெரியாத நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் அதிகளவில் பதிவாகிய பிரதேசமாக காணப்படுகிறது.

யாழ்ப்பாணம்: தீபகற்பத்தின் வாயிலைத் தாண்டி நாம் உட்செல்ல வெளிறிய கடல் நீலமும் செம்மண்ணுமாக நிறங்கள் மாறுகின்றன. இந்த வளமான மண்ணில் காணும் இடமெல்லாம் பழமரங்களும், நெல்லும் புகையிலையும் விளைந்து காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக விளங்கும் அனைவராலும் விரும்பப்படும் சில பயிர்களை விளைவிக்கும் மருதனார்மடம், இணுவில் மற்றும் கந்தரோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலரை நாம் சந்தித்தோம். வயல்கள் ஒரு புறமும் இராணுவ கண்காணிப்பு கோபுரங்களால் மறு புறமும் நிறைந்த ஒரு சிறிய வீதியொன்றினூடாக நாங்கள் பயணிக்கின்றோம்.

விவசாயிகள் ஏன் முக்கியமானவர்கள்?

நாங்கள் இந்தத் தொடருக்கான கள ஆய்வுகளை செய்து முடித்து ஒரு மாதத்துக்கு பிறகு அதாவது ஒரு வருடப் பேரழிவுக்குப் பிறகு அரசு அசேதன உரத்தடையை திரும்பப்பெற்றது. நடந்த அழிவுகளிற்கு இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. உரங்களின் விலைகள் தற்போது மும்மடங்காகி விட்டபடியால் பல விவசாயிகளுக்கு இன்னும் உரங்கள் கைக்கு எட்டாத் தூரத்திலே தான் காணப்படுகின்றன. எரிபொருட்தட்டுப்பாடும் புதிதாய்ச் சேர விவசாயிகளுக்கு அடிமேல் அடி.

அண்மையில்தான் பணவீக்கத்தை பின்தொடரும் செயலியை நாம் வெளியிட்டிருந்தோம். அதில் காட்டப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் சடுதியான விலையேற்றத்தில் விவசாயிகளின் பங்கு என்ன?

இலங்கையிடம் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலவாணி இல்லை. அதன் பலனாக கடனுதவிகளிலும் உலருணவு உதவிகளிலும் நாம் தங்கியுள்ளோம். இவ்வுதவிகளும் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கும் விவசாயிகளாலும் நமது மொத்தத் தேவைக்கான உற்பத்தியை மேற்கொள்ள இயலாது. எனவே விலைகள் மென்மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்புண்டு.