நமது பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஆனால் ஏன்? எப்படி? இந்த நெருக்கடியில் நாங்கள் எப்படி கீழ்நிலைக்குச் சென்றோம் என்பதை எங்கள் பொருளாதார நிபுணர் விளக்குகிறார்.


February 1, 2022

Read this article in English | සිංහල


Untitled

கதை மற்றும் ஆய்வு : உமேஷ் மொரமுதலி தரவு மற்றும் காட்சிப்படுத்தல்கள் : யுதஞ்சய விஜேரத்ன செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : மொஹமட் பைரூஸ் &  நாதிம் மஜீத்

இன்னொரு மின் துண்டிப்பு மக்களின் ஏமாற்றங்களை அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மக்கள் சமூக ஊடகங்களிலும் குழுக் கலந்துரையாடல்களிலும் வெள்ளமெனப் பாய்ந்து வந்த முறைப்பாடுகள் (மற்றும் சாபங்களின்) ஊடாக இந்த ஏமாற்றம் வெளிப்படுத்தப்பட்டது.

#PowercutLK என்ற ஹாஷ்டெக் பிரபலமடைந்ததுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்தமை மற்றும் ஏனைய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றமை என்பவற்றைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலை பலராலும் வெளிப்படையாகப் பேசப்பட்டது. உணவு, எரிவாயு, மற்றும் எரிபொருட்கள் இன்மை பொருளாதாரம் ‘நல்ல நிலையில் இல்லை’ என அனைவரையும் உணர வைத்தது.

இந்த நாளாந்த வாழ்வின் போராட்டங்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் என்பன பல பொருளாதார கொள்கைகளின் பின்விளைவுகளாகும். இவற்றை ஏற்படுத்திய அடிப்படைக் காரணிகளை புரிந்து கொள்வதற்கு கடந்த தசாப்தத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு என்ன நடந்தது என சிறிது தேடிப்பார்ப்பது அவசியமாகும். இக்கட்டுரை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒன்று எனக் கருதிக்கொள்ளுங்கள்.

நாம் தற்போதைய நிலையை எவ்வாறு அடைந்தோம் அத்துடன் விடயங்கள் எவ்வாறு எமது கையை மீறிச் சென்றன?

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றிய சுருக்கமான பார்வை

மூன்று தசாப்தங்கள் நிலவிய யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுற்றவுடன், இலங்கை அதியுயர் பொருளாதார வளர்ச்சி வீதங்களை பதிவு செய்தது. இதன் பொருள், நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் உயர் வீதத்தில் விரிவடைந்தது என்பதாகும்.

2010 இல் இலங்கையின் பொருளாதாரம் 8% வளர்ச்சியை எட்டியது. 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வீதங்கள் முறையே 8.4% மற்றும் 9.1% எனக் காணப்பட்டன.

GDP per capita.png

எவ்வாறாயினும், கட்டுமானம் மற்றும் சில்லறை வர்த்தகம் போன்ற உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கமே இந்த பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய அளவில் பங்களித்திருந்தது, கட்டுமானத் துறையின் வளர்ச்சி அரசாங்கம் மற்றும் தனியார் துறை மேற்கொண்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் காரணமாக ஏற்பட்டதாகும். அதி வேக வீதிகள், விமான நிலையங்கள் அத்துடன் கொழும்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் போன்றவற்றை உதாரணமாக இங்கு குறிப்பிடலாம். இது பற்றிய சிறியதொரு சூழமைவை வழங்க வேண்டுமானால், தெற்கு அதி வேக வீதியின் முதலாம் கட்டம் கிட்டத்தட்ட 740 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2011 இல் திறந்து வைக்கப்பட்டது. எமது இரண்டாவது அதிவேக வீதியான கொழும்பு கட்டுநாயக்க வீதி 2013 இல் திறந்து வைக்கப்பட்டது. இதன் நிர்மாணிப்புக்கு 292 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியதுடன் சீனாவின் EXIM வங்கி வழங்கிய கடனின் மூலமே இந்த அதி வேகப் பாதையின் நிர்மாணம் சாத்தியமாகியது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் இந்த நடவடிக்கைகளை முன்கொண்டு சென்றன. தெற்கு அதி வேகப் பாதை நீடிக்கப்பட்டது, வெளிச் சுற்று அதி வேகப் பாதை (OCH) நிர்மாணிக்கப்பட்டதுடன் 2015 இல் மத்திய அதி வேகப் பாதையின் நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது.

பொருளாதாரத்தின் இவ்வாறான துறைகளை பொருளியலாளர்கள் வர்த்தகம் செய்யப்பட முடியாத துறைகள் என அடையாளம் காண்கின்றனர். ஏனெனில் இத்துறையுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன சர்வதேச ரீதியாக வர்த்தகம் செய்யப்பட முடியாதனவாகும். எனவே, இந்த துறைகளில் இருந்து பெறப்படும் வளர்ச்சி நாட்டின் சனத்தொகையின் அளவு மற்றும் கொள்வனவுத் திறன் (சராசரி நபரின் பொருட்களை வாங்கும் திறன்) என்பவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றது. எனவே, அவ்வாறான வர்த்தகம் செய்யப்பட முடியாத துறைகளால் ஏற்படுத்தப்படும் எந்தவொரு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சி சிறிது காலமே நிலைத்திருக்கும் தன்மை மிக்கது. 22 மில்லியன் என்ற சிறிய சனத்தொகையைக் கொண்ட இலங்கைக்கும் இது அதிகம் பொருந்தும் விடயமாகும்.

2013 ஆண்டு முதல்: உறுதியான  வீழ்ச்சி

2013 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.4% இல் இருந்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இந்த வீழ்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று இறுதியாக 2019 இல் 2.3% என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. 2001 ஆம் ஆண்டின் பின்னர் பதிவு செய்யப்பட்ட அதி குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதமாக இது அமைந்திருந்தது. இதற்கு இரண்டு பிரதான காரணங்களை முன்வைக்க முடியும்: இலங்கையின் குறைந்த சனத்தொகை காரணமாக சில்லறை வர்த்தகம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளை விரிவாக்க முடியாமல் போனமை; மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிக்கத் தவறியமை என்பனவே அவையாகும்.

Growth rate (1).png

நாம் எவற்றை விற்பனை செய்கின்றோம்?